மகனுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க விரும்பும் தாய், தங்கள் உறவை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த ரோஹித்குமார் சவுராஸ்யா, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக தானம் வழங்க அவரது தாய் ரீட்டா சவுராஸ்யா முன்வந்தார். ஆனால், தாய் மகன் உறவை நிரூபிக்கவில்லை எனக் கூறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து தாய் ரீட்டா சவுராஸ்யா மற்றும் மகன் ரோஹித்குமார் சவுராஸ்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தாய் – மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம், நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை ஆகியவற்றை அளித்தும் அங்கீகார குழு ஒப்புதல் அளிக்கவில்லை என வாதிடப்பட்டது. ரோஹித்குமார் நோய் முற்றிய நிலையில் இருப்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க அங்கீகார குழுவுக்கு உத்தரவிட  வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆதாரங்களின் அடிப்படையில் ரிட்டாவின் மகன் ரோஹித் என்பதில் திருப்தி அடைவதாகவும், அதை நிரூபிக்க மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி, ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உடலுறுப்பு மாற்று அங்கீகார குழுவுக்கு உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version