நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கும் திருப்பூரில், துணி நூல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், தற்போது கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பஞ்சு விலை மீண்டும் உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என நூற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11% வரி விதிப்பை ரத்து செய்ததால் நூல் விலை குறையும் எனப் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். கடந்த மாதத் தொடக்கத்தில் ரூ.10 வரை குறைந்த நிலையில், ஜூன் 23-ம் தேதி திடீரென ரூ.5 உயர்த்தப்பட்டது. அந்த அதிர்ச்சி விலகும் முன்பே, தற்போது மீண்டும் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது உற்பத்தியாளர்களைப் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய பருத்தி கழகம் (CCI) மீண்டும் பஞ்சு விலையை உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் கேண்டிக்கு ரூ.1,500 அதிகரித்து, ஒரு கேண்டி பஞ்சு விலை மீண்டும் ரூ.70 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. இதன் காரணமாகவே நூல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நூற்பாலைகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால் புதிய ஆர்டர்களைப் பெறுவதிலும், ஆடை உற்பத்திச் செலவைச் சமாளிப்பதிலும் திருப்பூர் பின்னலாடைத் துறையினர் சவாலைச் சந்தித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version