திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலங்களாகும். இங்கு நிலவும் கால நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி,வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் அதிகமானோர் வருகை புரிவார்கள்.

அவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மே மாதத்தில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறும். இந்த மலர் கண்காட்சியானது தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும்.

அதன்படி இன்று பிரையண்ட் பூங்காவில் 63-வது கண்காட்சி துவங்கியுள்ளது. இந்தக் கண்காட்சியில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் மலர் படுகைகளில் பூத்து குலுங்குகின்றது.

மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைகளில் அலங்கார செடிகள் உள்ளிட்ட 10,000 செடிகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான கொய் மலர்களை கொண்டு பாம்பன் பாலம், ஜல்லிகட்டு காளையை வீரர் அடக்குவது  போன்றும்,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கோபுரம், மகளிர் மேம்பாடு,  பூக்களால் ஆன இரட்டை இதயம் செல்பி பாயிண்ட், சிறுவர்களை கவரும் விதமாக  நேரோட்டோ பொம்மை உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் காய்கறிகளால் பல்வேறு உருவங்களும் காட்சிபடுத்துப்பட்டு இருப்பதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் இன்று துவங்கும் மலர் கண்காட்சி மே 31வரை,12 நாட்கள் நடைபெறுகிறது, இந்த 12 நாட்களுக்கும் பூங்கா நுழைவு கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது,மாற்று திறனாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு கட்டணமும் இலவசமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version