புகை ஓவியக் கலை மூலம் பிரபலங்களுக்கும் சமூக நிகழ்வுகளுக்கும் அஞ்சலி மற்றும் விழிப்புணர்வு படைப்புகளை உருவாக்கி வரும் கோவை கலைஞர் யூ.எம்.டி. ராஜா, மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு வித்தியாசமான முறையில் தீபாஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமிய மணத்தை உலகறியச் செய்த முன்னணி இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் யூ.எம்.டி. ராஜா தனது தனித்துவமான கலை வடிவத்தின் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்திய அவர், அதன் கரும்புகையை பயன்படுத்தி எந்தவித தூரிகை அல்லது பென்சிலும் இன்றி, சிறிய குச்சியின் உதவியுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உருவப்படத்தை வரைந்தார். மேலும், “இமயம் இருண்டது… இமயம் சரிந்தது…” என்ற உருக்கமான வாசகத்தையும் தனது படைப்பில் இடம்பெறச் செய்தார்.
சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ஓவியங்களை உருவாக்கி வரும் யூ.எம்.டி. ராஜா, கடந்த காலங்களிலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு இதேபோன்ற முறையில் அஞ்சலி மற்றும் வாழ்த்து படைப்புகளை உருவாக்கி கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்த பாரதிராஜாவுக்கு, ஒரு சிறிய கலைஞனாக தனது மரியாதையையும் புஷ்பாஞ்சலியையும் இந்த படைப்பின் மூலம் செலுத்தியுள்ளதாக யூ.எம்.டி. ராஜா தெரிவித்தார்.

