தமிழகத்தில் பிவிசி பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்க, விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இந்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

“பிவிசி பிளக்ஸ் போர்டுகள் மட்காத, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருளாகும். பிவிசி பிளக்ஸ் போர்டுகளை எரித்தும், மண்ணில் புதைத்தும் அழிக்கலாம் என்கின்றனர். பிவிசி பிளக்ஸ் போர்டுகளை எரிக்கும் போது வெளியேறும் நச்சு வாயுவை சுவாசித்தால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இதில் பிவிசி பிளக்ஸ் போர்டுகளை சேர்க்கவில்லை. இதற்கு தடை விதிக்காமல் மற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதால் எந்த பலனும் ஏற்படாது.

எனவே, தமிழகத்தில் பிவிசி பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை அரசாணையில் பிவிசி பிளக்ஸ் போர்டுகளை சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்” என கடந்த 2019 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரர் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி நிவாரண பெற்றுக் கொள்ளலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version