சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற ரயிலில் பயணம் செய்த சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட காவலர் ஷேக் அப்துல்லாவை அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ஷேக் அப்துல்லா, கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பணியை முடித்துவிட்டு கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 20 வயது சட்டக் கல்லூரி மாணவியிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது செல்போனில் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததுடன், ரயில்வே போலீசாருக்கும் தகவல் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய காவலரை அடையாளம் கண்டனர்.

மாணவி அளித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில், ஷேக் அப்துல்லா மீது பாலியல் தொல்லை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமினில் வெளியே இருந்த ஷேக் அப்துல்லாவின் ஜாமின் காலம் நிறைவடைந்த நிலையில், அவரை அரக்கோணம் ரயில்வே போலீசார் கோவையில் கைது செய்து அரக்கோணத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version