சாகித்திய அகாதெமி விருது பெற்ற புகழ்பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணி (79) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக மற்றும் தமிழ் இலக்கிய உலகப் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
பூமணியின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் இலக்கிய உலகில் ஆழமான தடம் பதித்த பூமணியின் படைப்புகள் எளிய மக்களின் வாழ்க்கையையும் கரிசல் மண்ணின் எதார்த்தத்தையும் அப்படியே பிரதிபலித்தவை. இவரது ‘வெக்கை’, ‘பிறகு’, ‘வாய்க்கால் வரப்புகள்’, மற்றும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘அஞ்ஞாடி’ ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் என்றும் அழியாத புகழ்பெற்றவை. இதில் இவரது ‘வெக்கை’ நாவல் தான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படமாகப் பரிணமித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எழுத்துலகில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறையிலும் தடம் பதித்த பூமணி, கடந்த 1997-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற ‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

