தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் சமீபத்தில் லாரிகளுக்கான எப்.சி. கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின. இதற்கு முன் ரூ.850 ஆக இருந்த எப்.சி. கட்டணம் தற்போது ரூ.33,040ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கட்டண உயர்வு அவர்களுக்கு மேலும் சுமையாக அமைந்தது.

இதன்காரணமாக் லாரிகளுக்கான எப்.சி. (FC – Fitness Certificate) கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், லாரிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதம் விதிக்கப்படும் நடைமுறையை நிறுத்தவேண்டும், மோட்டார் தொழிலில் உள்ள குறைகளை சரி செய்ய மோட்டார் வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது கோரிக்கைகளை, பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக, சென்னை துறைமுகத்தை சேர்ந்த சங்கத்தினர் மற்றும் கனரக வாகனங்களை சேர்ந்த சங்கத்தினர் என 80க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றிணைந்து நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version