தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஒட்டுமொத்தமாக அனுமதி கேட்க முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களை அணுக இந்து மக்கள் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் கொள்கைகள், கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கு அனுமதி வழங்க தமிழக டிஜிபிக்கு மனு அளித்தும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விழிப்புணர்வு வரும் ஜூலை 20 ம் தேதி திருவள்ளுரில் துவங்கி சென்னை, திருவண்ணாமலை வழியாக ஆக்ஸ்ட் 2 ம் தேதி தர்மபுரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் நடத்த ஒட்டுமொத்தமாக அனுமதி கோர முடியாது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுக மனுதாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.