பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 535-க்கும் மேற்பட்ட பல்மருத்துவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பல்மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன் ஆகியோர் போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று, தங்களது ஆதரவை தெரிவித்தனர். போராட்டம் நடத்தும் டாக்டர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

