கள்ளழகருக்கு கோலாகல வரவேற்பு…
புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகையாற்றில் எழுந்தரும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து புறப்பட்டு, மதுரை நகருக்கு வருகை தந்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.
இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
11ம் தேதி இரவு தல்லாகுளத்தில் விடியவிடிய நடைபெறும் எதிர்சேவையில் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சாற்றப்படுகிறது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக 12ம் தேதி காலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்ய உள்ளனர்.