100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும் VB-G Ram G திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செனையில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மத்திய அரசு, அதிமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல்,அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் விவேகாநந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இதில் திமுக தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மீ.ஆ.வைதியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி ஜி ராம்ஜி என்ற பெயரிலும் மத்திய அரசு 60வது சதவீத பங்களிப்பிலும் மாநில அரசு 40% பங்களிப்பிலும் 125 நாள் வேலை திட்டமாக மாற்றி மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் தேனி வடக்கு மாவட்டம் சார்பாக போடி சில்லமரத்துப் பட்டியில் போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் மற்றும் ஐயப்பன் தலைமையிலும் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக காங்கிரஸ் மக்கள் நீதி மையம் விடுதலை சிறுத்தைகள் ஆதித்தமிழர் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சியினரும் கலந்து கொண்டனர். கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி திட்டத்தை பாஜக முடக்க நினைப்பதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் இந்தியன் வங்கி முன்பு மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி நிதியை குறைத்து, 100 நாள் வேலை திட்டத்தை அழிக்க நினைக்கும் ஒன்றிய மோடி தலைமையிலான பா.ஜ.க வின் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதற்கு திமு.க. ஒன்றிய செயலாளர் இரா. மனோகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று (டிசம்பர் 24, 2025) பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருச்சியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை அடுத்த கோட்டைமேடு யூனியன் ஆபீஸ் அருகே திமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை பெயர் மாற்றி நிறுத்த துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
