சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் இருந்து தலை இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் செண்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்திற்கு மின்சார ரயில்கள் செல்லும் 4-வது நடைமேடையில் இருந்து பெரம்பூர் ஜமாலியாவுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டு அருகே நீலநிற டிராலி சூட்கேஸ் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

ரெயில் பயணிகளுக்கு இடையூறாக, நீண்டநேரம் கேட்பாரற்ற நிலையில் இருந்த அந்த சூட்கேஸ் பற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் பயணிகள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் சூட்கேஸாக இருக்கும் என எண்ணி எடுத்து வைக்க முயன்றனர்.

ஆனால் அந்த சூட்கேஸ், வழக்கத்துக்கு மாறாக அதிக பாரமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது, அதில் தலை, கை, கால்கள் துண்டிகப்பட்ட நிலையில் இளைஞரின் உடல், சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி, அந்த சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

கை மற்றும் கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரத்தம் உறைந்தும், உடல் சற்று அழுகிய நிலையிலும் காணப்பட்டது. அதனால் அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என தெரிகிறது. கொலையானவருக்கு 30 வயது இருக்கும் எனவும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன் மற்றும் உயரதிகாரிகள் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். ரெயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் ‘ஜான்சி’ வரவழைக்கப்பட்டது. அது சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ரயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது.

மீட்கப்பட்ட இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version