கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கிரிகெட் சூதாட்டமும் தலைதூக்கி வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கோவை காந்திபுரம் போலிசார் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதை தொடர்ந்து போலிசார் வேறு யாராவது இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா? என்று தனிபடை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் “லீப் புக்” மற்றும் ‘லோட்டஸ்” என்ற வலைதளப்பக்கததை உருவாக்கி அதன்மூலம் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை போலிசார் கண்டறிந்தனர்.
அதைதொடர்ந்து ரகசியமாக மேற்கொண்ட விசாரணையில் கோவை சொக்கம்புதூர், அன்னை இந்திரா நகரை சேர்ந்த ராஜகணேஷ் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2.25 லட்சம் பணம், சொகுசுக்காரை பறிமுதல் செய்த போலிசார், வேடப்பட்டியில் உள்ள ஹரிஸ்ரீ தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான அவரது இடத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 லட்சம் டெபாசிட் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தொகையை முடக்க போலிசார் கடிதம் அனுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், ராஜகணேஷ் சூதாட்ட கும்பலின் தலைவனாக செயல்பட்டாரா? மேலும் இந்த சூதாட்டத்தில் யார்,யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.