ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் தந்தை மற்றும் மகனை கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகமுத்து மற்றும் அவரது மகன் மணி ஆகியோர் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் (Second Sales) கடை நடத்தி வருகின்றனர். இன்று வழக்கம்போல் இருவரும் கடையில் இருந்தபோது, மணி மற்றும் கார்த்தி என்பவருக்கிடையே இருந்து வந்த முன்விரோதம் தொடர்பாக கார்த்தி நேரடியாக கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த கார்த்தி, நாகமுத்து மற்றும் மணியை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த மணி உயிர் தப்ப ஓடியபோதும், அவரை விரட்டிச் சென்ற கார்த்தி சாலையிலேயே மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மணியை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த நாகமுத்துவும் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சினிமா காட்சியை ஒத்த வகையில் ஒருவரை விரட்டிச் சென்று வெட்டும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
