தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர்கள் கொடியரசன்-பூங்கொடி தம்பதி. இந்த தம்பதியரின் மகள் நதியா(38).
நதியாவுக்கும், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சுருளி (45) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் உள்ளார். சுருளிக்கும், நதியாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுருளியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நதியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று(18.06.2025) குள்ளப்ப கவுண்டன்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்ற சுருளி, தனது மனைவி நதியாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு நதியா மறுத்ததால், நதியாவின் தாயார் பூங்கொடியிடம் தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்குப் பூங்கொடியும் தனது மகளை அனுப்ப முடியாது என்று கறாராக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் சுருளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தனது மனைவி நதியா கண் முன்னே மாமியார் பூங்கொடியை சரமாரியாக குத்தினார். நதியாவின் கூச்சல் சத்தம் கேட்டு கூடவே, சுருளி அங்கிருந்து தப்பியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூங்கொடியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூங்கொடி உயிரிழந்தார். இது தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுருளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.