திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த வணிகவியல் பாடத்தின் இண்டஸ்ட்ரியல் லா தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து, தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் கசிவு 

பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 106 கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் நடக்கவிருந்த வணிகவியல் பாடத்தில் “இண்டஸ்ட்ரியல் லா” பிரிவிற்கான தேர்வு வினாத்தாள் நேற்று இரவு கசிந்ததாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து, பல்கலைக்கழகம் உடனடியாகத் தேர்வை ஒத்திவைத்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது. வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாகப் பல்கலைக்கழகம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

 

அடுத்தகட்ட நடவடிக்கை

ஏற்கனவே அனுப்பப்பட்ட வினாத்தாள்களை மையங்களில் இருந்து திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது. திரும்பப் பெறப்படும் வினாத்தாள்களின் கட்டுகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், காவல்துறை விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version