விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன.
சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டியில் குருசாமி என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான காகித மறுசுழற்சி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மறுசுழற்சிக்காக அதிகளவில் காகித பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், திடீரென காகித பண்டல்களில் தீப்பிடித்தது. காகிதங்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவி ஆலையின் பெரும்பாலான பகுதிகளை சூழ்ந்தது.
தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
