சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, மாலை நேர நெரிசல் மிகுந்த நேரத்தில் மின்சார ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரை ரயில் நிலையத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கும் இயக்கப்படும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்ப ரயில் நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படாததால் செய்வதறியாது தவித்தனர்.

ரயில் நிலையங்களில் முறையான அறிவிப்புகள் தாமதமாக வெளியிடப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில், “சிக்னல் கோளாறு காரணமாகக் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படாது; அதற்குப் பதிலாகப் பயணிகள் பூங்கா நகர்  ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் செங்கல்பட்டு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என மாற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் பயணிகள் பூங்கா நகர் ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுத்ததால் அங்கும் பெரும் கூட்ட நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டது.

இதனிடையே, தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்னல் கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீவிர முயற்சிக்குப் பின், இரவு சுமார் 7.30 மணியளவில் சிக்னல் கோளாறு முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version