மயிலாடுதுறை அருகே 10 வருட காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் காதலனை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியில் பெரியகுளம் அருகே உள்ள பக்கத்து தெருவில் (காலணி தெரு) வசிக்கும் குமார் என்பவரின் மகளான மாலினி என்ற பெண்ணை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
வைரமுத்துவின் காதலுக்கு மாலினி வீட்டார் எதிருப்பு தெரிவித்து வந்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால் மாலினியின் குடும்பத்தார் அவரை நிராகரித்துள்ளனர்.
போலீஸ் விசாரணைக்கு பிறகு வைரமுத்துவின் வீட்டிற்கு மாலினி சென்ற நிலையில் இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைக்க வைரமுத்துவின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வேலைக்காக மாலினி சென்னைக்கு சென்ற நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சராமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிக்காயம் ஏற்பட்ட வைரமுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொணார்.
வைரமுத்துவின் காதலுக்கு மாலதி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆணவ கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.