வேலூர் மாவட்டத்தில் புதிய மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட வழித்தடங்கள் உட்பட மொத்தம் 18 வழித்தடங்களுக்கான 18 மினி பேருந்துகளை நீர்வளத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(18.06.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கிறது. அதனை அரசு அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். மினி பேருந்துகள் துவக்க விழா தமக்கு அரசு அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை இதனால் நான் இந்த விழாவிற்கு வந்திருக்கவே மாட்டேன்.

முதல்வர் தொகுதியில் அனைத்து விழாக்களுக்கும் செல்ல வேண்டும் என கூறியதால் வந்தேன். முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி கிடைக்க நடவடிக்கை எடுத்து இருப்பேன் என்று கூறினார். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்று அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் ஓட்டுக்காக எல்லா இடங்களிலும் பேருந்து வேண்டுமென கேட்கக்கூடாது அரசியல்வாதிகளும் அனுசரித்து வழித்தடங்களை கேட்க வேண்டும் என்றார்.

ரூ.2,000 கோடி ஒதுக்கியும் ஒரு அணை கூட கட்டப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு,
பாலாற்றில் சென்று பாருங்கள் எவ்வளவு அணை கட்டி உள்ளேன் என தெரியும் அவருக்கு ஒன்றும் தெரியாது அவர் பாவம் விடுங்கள் என்றார். நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.100 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்ற கேள்விக்கு, அப்போதே ராவணன் சீதையை தூக்கிச் சென்றான் துஷ்டர்கள் இல்லாத சமுதாயம் உலகத்தில் எங்கும் கிடையாது, அதையே நாம் சொல்லிவிட முடியாது. உணவில் எல்லா பதார்த்தங்களும் வைக்கிறார்கள், பூசணிக்காய் கூட்டு வைக்கிறார்கள் நீங்கள் எதை சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் பூசணிக்காய் கூட்டை சாப்பிட்டேன் என்றா சொல்லுவீர்கள்? குற்றங்கள் சமுதாயத்தில் அதிலும் வளர்ந்த சமுதாயத்தில் நிகழ்வது அதிகம்.

குற்றங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து அதை தடுத்தால் தான் அது நல்ல அரசு, அந்த அரசு எங்கள் தளபதி அரசு அவருக்கு விவரம் தெரியாது அவர் அப்படியே காலத்தை ஓட்ட வேண்டியது தான் என்றார்.
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது என எடப்பாடி குற்றம் சாட்டி இருக்கிறார் என்ற என்ற கேள்விக்கு, தூத்துக்குடியில் வண்டி மேல் ஏறி துப்பாக்கியால் சுட்டார்கள் அது எங்கள் ஆட்சியா அது எடப்பாடி ஆட்சியில் தானே நடந்தது அதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றார்.

புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு கொடுத்துள்ளார்கள் எத்தனை என்று ஏன்? உங்களிடம் சொல்ல வேண்டும் பாலாற்றில் குவாரி திறக்கப்பட உள்ளது என்றார். பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு, இன்னும் எவ்வளவோ காலம் உள்ளது என்றார். எனக்கு கொரோனா என எந்த செய்தியாளர் செய்தி போட்டீர்கள் நீங்கள் போட்டசெய்தியால் அனைவரும் எனக்கு கொரோனா என நாடு முழுக்க இருந்து போன் செய்து கேட்கிறார்கள் இந்த மாதிரி தவறான செய்தியை போடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version