சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்எஸ்ஆர்எம்) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள தாய்மார்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது. வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும் மேலும் அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் இந்த மருத்துவமனையின் சேவைகளால் பயனடைகின்றனர்.
குடும்ப நல மருத்துவ சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை இம்மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. இதுதவிர இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 12,000 மகப்பேறுகள் நடைபெறுவதன் மூலம் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது.
இம்மருத்துவமனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் செயல் திறனை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் கட்டட சீரமைப்பு, மின்சார கருவிகள் மற்றும் மின்தூக்கி பணிகளுக்காக 11.63 கோடி ரூபாய் நிதிக்கு ஒப்புதல் அளித்து கடந்த ஆண்டு ஜன.30ம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதனடிப்படையில், 300 படுக்கையுடன் கூடிய புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், RSRM மருத்துவமனையில் நடைபெறும் கட்டுமான பணிகளையும், 300 படுக்கையுடன் கூடிய புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் செந்தில் குமார் I.A.S., தேசிய நல்வாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் I.A.S., இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா. மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர். அரவிந்த் அவர்கள், RSRM மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சாந்தி இளங்கோவன், RMO விஜயலட்சுமி, மருத்துவ அலுவலர் B.வனிதா மலர், RSRM மருத்துவமனை பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோருடன் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
