தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரம் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் மாநகரில் பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தனித், தனியான வீடுகளில் நோட்டமிட்டு உள்ளே புகுந்து கொள்ளை அடித்து சென்றது தொடர்ந்தது, மேலும் டவுசர் கொள்ளையர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு, உடல் முழுவதும் எண்ணையை ஊற்றிக் கொண்டு இரவில் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வடமாநில டவுசர் கொள்ளையர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை 7 ம் தேவி அன்று கோவைப்புதூர் பகுதியில் உள்ள சாமுவேல் என்பவரின் வீட்டில் 10 பவுன் நகை 34,000 ரூபாய் ரொக்க பணம் என மேலும் அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகளில் கொள்ளைபோனது. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதைப் பார்த்த போது, டிப் டாப்பாக உடையில், மங்கி குல்லா அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மங்கி குல்லா அணிந்த டிப் டாப் கொள்ளையனை உடனடியாக பிடித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைவார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version