திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 21 ஆம் தேதி ஊர் காவல் தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், ”அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள், 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகள், 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 35 லட்சத்தில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், 200 தனியார் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளன. இது மட்டுமின்றி, 500 ஆந்திரா பேருந்துகள், 20 கர்நாடகா பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 16 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 15,011 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 24 தீயணைப்பு வாகனங்கள், 430 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
அண்ணாமலையார் கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் 1,060 கண்காணிப்பு கேமராக்கள், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது பக்தர்கள் ஏரி தீப தரிசனம் காண்பதை மலையின் உறுதி தன்மையை பொருத்தும், மழையின் அளவை பொருத்தும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
