கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு குறித்து புதிய துணை கண்காணிப்பு குழுவினர் முதல் முறையாக இன்று ஆய்வுப் பணிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர் வளத்துறை கமிஷன் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது.
புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆணைய தலைவராக அணில் ஜெயின் தலைமையில் ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினரை நியமித்துள்ளனர்.
இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா,
காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன்,கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் டிங்கு பிஷ்வால்,கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என ஏழு பேர் கொண்ட குழுவினர் உள்ளனர்.
மேலும் கண்காணிப்பு குழுவினருக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.கண்காணிப்பு குழுவினர் கடந்த மாதம் அணையில் ஆய்வு செய்த நிலையில்,துணை கண்காணிப்பு குழுவினர் முதல் முறையாக இன்று அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1373 கன அடியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில் செய்ய வேண்டிய மராமத்து பணிகள் குறித்து மத்திய கண்காணிப்பு குழுவின் சார்பாக அமைக்கப்பட்ட புதிய துணை கண்காணிப்பு குழுவினர்
கண்காணிப்பு குழு இயக்குனர் கிரிதர் தலைமையில்,தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம் ஆகியோரும் கேரள அரசு சார்பில்
தலைமை பொறியாளர் லியன்ஸ் பாபு
உதவி பொறியாளர் ஜிசித் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவினர் மற்றும் இரு மாநில அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக படகின் மூலம் அணை பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த ஆய்வில் மெயின் அணை, பேபி அணை,ஷட்டர் பகுதிகள்,
அணையில் நீர் கசிவு,மற்றும் கேலரி பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக்கு குழு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர்.
இந்த துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு முதல்முறையாக இன்று அணையில் ஆய்வுப் பணிகளை பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது.