முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவைவிமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு யாரும் வர மாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் மூன்று லட்சம் பேரும் மாநாட்டின் போது 5 லட்சம் பேரும் வந்திருந்தார்கள் என்றார். சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மாநாடு நடந்து முடிந்து இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காவல்துறையினர் ஒருவர் கூட அந்த வளாகத்தில் இல்லை எனவும் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து மாநாட்டில் பங்கேற்று திரும்பினர் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தோல்வி பயத்தில் திமுகவினர் தற்பொழுது பேசிக் கொண்டு இருக்கின்றனர் எனவும் அவர் விமர்சித்தார். திருமாவளவன் திருநீற்றை அழித்தது குறித்து திருமாவளவன் அளித்த விளக்கம் தொடர்பான கேள்விக்கு அதை நீங்கள் நம்புகின்றீர்களா? எனவும் நம்புவது போன்று பதிலளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
பெரியார்,அண்ணா குறித்து மாநாட்டில் வீடியோ வெளியிட்டது வருத்தம் அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது அவர்கள் கருத்து என்றார். நீதிமன்ற அவமதிப்பு என திமுக வினர் தெரிவித்திருபது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,திமுகவினர் நாங்கள் செய்யாததை தான் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்றும் நேற்றைய மாநாட்டில் பக்தி பாடல்கள், நடனம், பரத நாட்டியம் போன்றவை தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதேபோல் அதிமுகவின் வருத்தத்தை சாதாரணமாக பாஜக எடுத்து கொள்கின்றதா? என்ற கேள்விக்கு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு கண்டிப்பாக பேசுகிறேன் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா என்ற கேள்விக்கு,நேற்று நிகழ்ச்சி முடிந்தவுடன் நேற்று இரவே புறப்பட்டு கோவை வந்து விட்டோம். அது என்னவென்று பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் எனவும் மழுப்பலாக பதிலளித்தார். அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் அதிமுக கலந்து கொண்டது குறித்த கேள்விக்கும் நயினார் நாகேந்திரன் பதில் அளிக்காமல் தவிர்த்து சென்றார்.