”தி.மு.க., கூட்டணியில் சண்டை போட்டு, கூடுதல் ‘சீட்’ கேட்போமே தவிர, மானத்தை விட்டுவிட்டு விஜய் கூட்டணியில் இணைய மாட்டேன் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் நீக்கப்பட்டும், பலர் சேர்க்கப்படும் பணிகளும் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் ஒரே மாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 48 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தி.மு.க., வலிமையான இயக்கம்; 75 ஆண்டுகள் கடந்து, இன்றும் ஆட்சியில் இருக்கும் இயக்கம். அதற்கு நாங்கள் முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு பதில் சொல்ல தெரியும்.

நான் தி.மு.க.,வுக்காக பேசவில்லை. நான் உள்வாங்கிய அரசியலுக்காக பேசுகிறேன். சிலருடன் சேர்ந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்; பொருளாதாரத்திலும் மேம்பாடு வரும் என்பதற்காக, கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது.

‘நடிகர் கட்சி துவங்கி விட்டார்; அவர் பக்கம் தான் மக்கள் சாய்கின்றனர். நீங்கள் எல்லாம் தோற்று விடுவீர்கள்’ என கூறுகின்றனர். அவ்வாறு தோற்றால் தான் என்ன? அதற்காக மானத்தை விட்டு விட்டு போக முடியுமா? அரசியலில் மானம் என்பதும் முக்கியம் தான். யாருக்காகவும், எதற்காகவும் கொள்கையை விட்டு விட்டு, யாரோடும் செல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் யாருடனும் உறவு இல்லை; அப்படித்தான் தி.மு.க.,வுடனும் உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்பதால், ‘இண்டி’ கூட்டணியில் தொடர்கிறோம்.

தி.மு.க., கூட்டணியில் ‘சீட்’ குறைவாக கொடுத்தால், அதில் என்ன பாதிப்பு இருக்கப் போகிறது? முடிந்தால் சண்டை போட்டு கூடுதல் சீட் வாங்குவோம்; இல்லையென்றால் அனுசரித்து செல்வோம். ஆனால், சீட் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். இந்த திருமாவளவன் ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டான். கட்சியினர் ஒவ்வொருவருக்கும் இது தான் எண்ணம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version