சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வரும் 27ம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, பேச்சுவார்த்தை, விருப்பமனு என இயங்கி வருகின்றன. ஆனால், ஒரு படி மேலாக சென்ற சீமான், 100 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் வரும் டிச.27-ம் தேதி நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டம் அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் அரங்கில் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
