தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவது கேள்வி குறியாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் நடைபெற்ற பிரதமர் மோதியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
பாலியல் வன்கொடுமைகள், காவல்துறை அத்துமீறல்கள், போதைப்பொருள் புழக்கம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், வேண்டாம் இனி திமுக வேண்டாம் என்ற தாரக மந்திரத்தை தேர்தல் வரை மக்களிடம் எடுத்துச் செல்வோம் எனக் கூறினார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், மதுரையில் இந்து முன்னணி நடத்திய மாநாடு தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார்.
தாமிரபரணி நதி தூய்மைப்படுத்துதல் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு அதற்கு உதவும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சி… எடப்பாடி பழனிசாமி உறுதி!
தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையின் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.