அரசுப் பள்ளி மாணவர்களைக் காவு வாங்கும் திமுக அரசு என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருத்தணி அருகே பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தை கண்டித்து, எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்குகிறது. படித்து முன்னேற வேண்டும் என்னும் நம்பிக்கையில் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினால், பிள்ளைகளின் தலையில் சுவரை இடிந்து விழச் செய்து, பெற்றோர் வயிற்றில் இடியை இறக்குவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று பிரம்மாண்டமாக விழாக்களை நடத்தத் திராணியிருக்கும் திமுக அரசுக்கு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மனமில்லை என்பது எவ்வளவு கேவலமானது?

இன்னும் எத்தனைப் பிஞ்சு உயிர்களைக் காவு வாங்கினால் திமுக அரசின் விளம்பர மோகம் முற்று பெற்று, மாணவர்களின் நலன் மீது அக்கறை வரும்? அரசுப் பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோரின் கைகளில் உள்ள இந்த இரத்தக் கறையை இனி எத்தனை விளம்பர நாடகங்களைக் கொண்டும் துடைத்தெறிய முடியாது!

அலட்சியப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் ஏழை எளிய மாணவர்களின் உயிரைப் பறித்துவிட்டு, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் வரவிடாமல் தடுத்துவிட்டு, “அப்பா” என்னும் நாடகம் போடும் இந்தப் பாவம் அறிவாலயம் அரசை சும்மா விடாது.

இவ்வாறு அந்த பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version