தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளால் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு எதிராக ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல மாதங்களாக தேமுதிகவுடன் அதிமுக தலைமை தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், திடீரென தேமுதிக திமுக கூட்டணியைத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஏமாற்றத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தேமுதிகவுக்கு ஒரு ‘புதிய ஸ்கெட்ச்’ போடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, திமுக கூட்டணிக்குச் சென்ற தேமுதிக தலைமையின் முடிவில் அதிருப்தியில் இருக்கும் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகளை வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு ‘சீக்ரெட் அசைன்மெண்ட்’ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேமுதிக அதிருப்தியாளர்களை நேரில் அணுகி, அவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் அதிமுகவுக்கு அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேமுதிகவின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, அதிமுகவின் பலத்தைப் பெருக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டி வருவதாகப் பேசப்படுகிறது.
