தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிரடி பணியிட மாற்றம் தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நகர்வாக, சென்னை பெருநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.அமல்ராஜ், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் ஆணையத்தால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த அபின் தினேஷ் மோதக், தற்போது சி.பி.சி.ஐ.டி  ஏ.டி.ஜி.பி-யாக மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த அமல்ராஜ், தற்போது சென்னை மாநகரின் புதிய சட்டம்-ஒழுங்கு காவல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1996-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தன் பணியைத் தொடங்கினார். தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எஸ்பியாகவும், திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களின் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு சிஐடி தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.காவல்துறையில் நவீன மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதில் அமல்ராஜ் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சேலம், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உயர் துல்லிய திறன் கொண்ட CCTV கண்காணிப்பு வலையமைப்புகளை உருவாக்கி, குற்றங்களின் அளவை 40% வரை குறைத்துக் காட்டினார்.

கோவையில் மாநிலத்தின் முதல் காவல் அருங்காட்சியகத்தையும், சென்னை எழும்பூரில் உள்ள பழைய ஆணையர் அலுவலகத்தை ‘தமிழ்நாடு மாநிலக் காவல் துறை அருங்காட்சியகமாக’ மாற்றியமைப்பதிலும் முக்கியப் பங்காற்றினார். விபத்துகளைக் குறைக்க ‘குழந்தைகளுக்கான போக்குவரத்துப் பூங்காக்கள்’ மற்றும் துப்பாக்கிச் சுடும் விளையாட்டை ஊக்குவிக்க உலகத்தரம் வாய்ந்த ‘ரைஃபிள் கிளப்களை’ உருவாக்கியுள்ளார்.

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், காவல்துறையில் சேர்ந்த பிறகு மனிதவள மேலாண்மையில் எம்பிஏ மற்றும் மேலாண்மையியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். இவரது சிறந்த சேவையைப் பாராட்டி சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், மெச்சத்தக்க சேவைக்கான காவல் துறை பதக்கம் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் சென்னையின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் இவரது பரந்த அனுபவம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version