தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் பகுதிகளில் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ம் நாட்களாக நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் படி நேற்று நள்ளிரவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தூய்மை பணியாளர்கள் கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,
”தூய்மை பணியாளர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.
* தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போதி தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
* பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
* தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
* நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
* கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
* தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணமின்றி வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
நீதிமன்ற உத்தரவால் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பவவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை. பணி நிரந்தரம் குறித்த வழக்குகளின் முடிவுகளை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம், தொழிலாளர் தீர்ப்பாயத்தின் வழக்கு முடிவுகளை பொறுத்து தீர்மானிக்கப்படும். தனியார் மயம் என்பது ஏற்கனவே மற்ற மண்டலங்களில் உள்ள நடைமுறைதான்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் 12 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளபடுகிறது. அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் திறந்திருக்கும்” எனக் கூறினார்.