திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 300 சவரன் நகை போட்டு, ரூ.70லட்சத்தில் கார் கொடுத்து, ரூ.5கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் இரண்டரை மாதங்கள் தான் நீடித்தது. மீதமுள்ள 200 சவரன் நகைகளை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் கொடுமை படுத்தியதாக தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பி வைத்து விட்டு ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இதே போன்றதொரு சம்பவம் தற்போது குமரியிலும் நடந்துள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய 26 வயதான மகள் ஜெமலா, பி.எஸ்.சி நர்சிங் முடித்தவர். இவரும் இனயம் சின்னத்துரையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

பின்னர் காதல் ஜோடியின் உறுதியால், பின்னர் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர். புதுமண தம்பதி இந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நிதின் ராஜ் பி.இ படித்திருந்தும், சரியான வேலை இல்லாமல் இருந்ததால், கணவன் -மனைவிக்கும் இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் ஜெமலாவின் பெற்றோருக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்அதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பதறியடித்து மருத்துவமனை சென்ற ஜெமலாவின் பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்த கருங்கல் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version