தமிழக அரசியலில் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் கட்சித் தாவல்களும், அரசியல் மாற்றங்களும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டன. அந்தவகையில், அனைத்து அரசியல் கட்சிகளிலும், மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிலவுகின்றனர். அந்தவகையில் ஜெயலலிதாவின் நம்பிக்கை முகமாக திகழ்ந்த செங்கோட்டையன் விஜய்யின் தவெகவிற்கு சென்று விட்டார். இதுவே மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இருப்பினும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வந்துவிட்டார். இதனால் வாக்கு சிதறாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஓ.பி.எஸையும் கூட்டணியில் இழுக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது. ஆனால் அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி கூறிவிட்டார். இதனால் அமைதி காத்து வந்த ஓ.பி.எஸுக்கு பேரிடியாக அமைந்தது அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம், திமுகவில் இணைந்தது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலும் திமுகவில் இணைந்துவிட்டார். போகிறவர்கள் போகட்டும் என்ற மன நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இப்படியிருக்கையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் முன்னாள் அமைச்சரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் தனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், அங்கு செல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் கூறிவிட்டதாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் செங்கோட்டையன் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளாராம். ஏற்கனவே, வைத்திலிங்கத்தை தவெகவில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து அதுவும் செல்வாக்குள்ள முன்னாள் அமைச்சர்கள், ஆளுங்கட்சியில் இணைவது, எதிர்க்கட்சியினரிடையே ஒருவிதமான மனச்சோர்வை உண்டாக்கும். அதே வேளையில், திமுகவின் தேர்தல் களப்பணிகளுக்கு இது ஒரு புதிய உத்வேகத்தையும், தேர்தல் வியூகங்களில் கூடுதல் சாதகத்தையும் தரும். மேலும், மாவட்ட ரீதியாக அதிமுகவின் தனிப்பட்ட செல்வாக்கைச் சிதைக்க திமுகவின் அரசியல் நகர்வுகள் கட்சிக்கு ஒரு வலுவான ஆயுதமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்… பொறுத்திருந்து பார்ப்போம்..

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version