தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ “ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நேற்று அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டை கலவை பகுதியில்10 செ.மீ., திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.