அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளும் கட்சியான தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை’ தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும் தி.மு.க. தீவிரம் காட்டி வருவது இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிகிறது.