டெல்லியில் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 50-வது கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு மே மாத பங்கீடாக 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் ஜெயகாந்தன் காணொலி வாயிலாகப் பங்கேற்று வலுவான வாதங்களை முன்வைத்தார். தமிழகத்தில் நிலவும் கடும் கோடை வெயில் மற்றும் அணைகளில் குறைந்து வரும் நீர் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உடனடியாகத் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

இரு மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பெரும் இழுபறி நீடித்து வரும் சூழலில், இன்றைய கூட்டத்தில் கர்நாடகா இக்கோரிக்கையை முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் முடிவடையாத சூழலில், இக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையிலும் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.

இறுதியாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய நீரை மே மாத இறுதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என கர்நாடகாவிற்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தமிழக டெல்டா பகுதி விவசாயிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version