தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும் திருப்பங்களை சந்தித்து வருகிறது. தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய்யின் தவெக, பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலையில் திணறி வருகிறது. மறுபுறம் விஜய்க்கு எதிராக, திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒருப்பகுதியாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இன்று (மே 8) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி, “தமிழகம் முழுவதும் மக்களின் உணர்வுகளும் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் அளித்த அமோக ஆதரவே இதற்குச் சான்று என்றும் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும், எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை; மக்களின் விருப்பமும் அதுவே,” எனவும் கூறினார்.. தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக ஆட்சி அமைப்பது குறித்த அடுத்தகட்ட முக்கிய முடிவுகளைத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தம்பிதுரை, “திமுகவுடன் பேச்சுவார்த்தை செல்கிறதா என்பது குறித்து இப்போதைக்கு என்னால் எதுவும் கூற முடியாது. எங்களது ஒரே இலக்கு அதிமுக ஆட்சியை மீண்டும் அமைப்பதே,” என சூசகமாகப் பதிலளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version