தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால், காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற தீவிர பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) அவசர மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

மாநிலச் செயலாளர் கே. சண்முகம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர். தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம், தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு அளிப்பது கொள்கை ரீதியாகச் சரியாக இருக்குமா என்பது குறித்துத் தலைவர்கள் விரிவாக விவாதித்து வருகின்றனர்.

செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, இன்று மதியம் 3 மணி அளவில் நடைபெறும் 90 பேர் கொண்ட மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும். இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) செயற்குழு கூட்டமும் சென்னை சூளைமேட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து மாலை 3 மணிக்கு நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு இடதுசாரி கட்சிகளும் ஒரே முடிவை எடுக்குமா அல்லது தவெக-வின் நிலைப்பாட்டைப் பொறுத்து முடிவுகள் மாறுமா என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version