2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸுக்குள் இரு தரப்பு குரல்கள் ஒலித்துவருவதை அறிவோம். பத்தாண்டுகளாக வெற்றி கூட்டாளியாக திகழும் திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரலாம் என்று ஒரு தரப்பு பேச, விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுடன் செல்லலாம் என்று இன்னோர் தரப்பு பேசிவருவகிறது. இதுதொடர்பாக பொதுவெளியில் சமீப காலமாக தங்கள் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள்.
அதோடு, ‘ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும்’ என விஜய் காட்டிய ஆசை, தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளையும், அக்கட்சி மேலிடத்தையும் ஆட்டி படைக்கிறது. அதனால், த.வெ.க., தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேசுவதும், தி.மு.க., அரசை விமர்சிப்பதுமாக காங்கிரசில் இருப்போர் சிலரின் போக்கு மாறி உள்ளது.
காங்கிரஸ் உருவாக்கிவரும் இத்தகைய புகைச்சல்களால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, கூட்டணி தொடர்பாக ஒரு முடிவெடுக்கப்படும்படி காங்கிரஸ் தலைமைக்கு செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது.
இந்தநிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விஜய் கட்சியுடன் கூட்டணியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, அவரது மாநிலங்களவை எம்.பி. பதவி காலம் 2027ல் முடிவடைவதால், மீண்டும் எம்.பி.ஆவதற்கு திமுகவின் ஆதரவு தேவைப்படும். இதன் காரணமாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கவேண்டும் என்று விரும்புகிறாராம்.
இருப்பினும் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை கட்சி மேலிடம் எடுத்தால், சிதம்பரம் தலைமையில் ”காங்கிரஸ் ஜனநாயக பேரவை” மீண்டும் உதயமாகும் என்றும் திமுகவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.
