பழனியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழனியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி ஜெயந்தி. செந்தில்குமாரின் மைத்துனர் சக்திவேல் இவர்கள் கூட்டாக சேர்ந்து ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தை பழனியில் துவங்கி உள்ளனர். ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தின் அட்மினாக சக்திவேல் செயல்பட்டு வந்துள்ளார். நிறுவனத் தலைவராக செந்தில்குமார் இருந்துள்ளார். இவர்களது தொண்டு நிறுவனத்தின் மூலமாக பெண்களின் வளர்ச்சிக்காக தொழில் சார்ந்த சேவை செய்வது வருவதாகவும், வால்பாறையில் அரசின் உதவியுடன் உண்டு உறைவிட பள்ளி நடத்தி வருவதாகவும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்து பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி உள்ளனர்.

மேலும் தனது தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் கொடுத்தால் அதற்கு மாதம் மாதம் இரண்டு சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஏஜெண்டுகள் மூலமாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.தொண்டு நிறுவனம் நடத்தி அதன் மூலம் பெண்கள் குழந்தைகள் போன்றவர்களுக்கு சேவை செய்து வருவதால் மோசடி செய்ய மாட்டார்கள் என ஏஜெண்டுகள் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமாக கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பி சென்னை காஞ்சிபுரம் திருச்சி மதுரை திண்டுக்கல் கோவை திருப்பூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஏஜெண்டுகள் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் வாய்ப்புத் தொகையாக செலுத்தியுள்ளனர்.

மேலும் பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய பணத்திற்கு அவர்களது வாய்ப்புத் தொகைக்கு ஏற்றவாறு 20 மற்றும் 50 ரூபாய் மதிப்புள்ள அரசு முத்திரைத்தாளில் தன்னிடம் வாங்கிய தொகையை எழுதி பூர்த்தி செய்து கையொப்பமிட்டு செந்தில்குமார் கொடுத்துள்ளார். வாங்கின பணத்திற்கு அடமான பத்திரம் கொடுத்ததை உண்மை என நம்பிய ஏராளமானோர் வாய்ப்புத் தொகையாக கோடிக்கனக்கான பணத்தை கொட்டியுள்ளனர். பணம் முதலீடு செய்தவர்களுக்கு மாதாமாதம் வட்டி தொகையை தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் முதலீடு செய்த நபர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வட்டி பணம் கொடுக்கப்படவில்லை.மேலும் செந்தில்குமார், அவரது மனைவி ஜெயந்தி மைத்துனர் சக்திவேல் ஆகியோரது செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பழனியில் செயல்பட்டு வந்த அறக்கட்டளை நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. பணம் டெபாசிட் செய்து ஏமாந்த மதுரையை சேர்ந்த செல்வி திண்டுக்கல்லை சேர்ந்த சுப்ரமணி உட்பட ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளான செந்தில்குமார் அவரது மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் உட்பட ஏராளமானோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் செந்தில்குமார் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் வைத்து கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் பின்னர் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version