தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றி கழகம் 108 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதிமுகவில் இதுவரை இல்லாத அளவிற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. தவெக-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக கட்சியில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதால், இன்று சென்னையில் நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த ரத்து நடவடிக்கை அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, பாஜகவுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு, தற்போதுள்ள சூழலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் தரப்பு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், இந்த முடிவில் ஒருமித்த கருத்து எட்டப்படாததே கூட்டம் ரத்து செய்யப்பட முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணி கடந்தும், எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர்கூட வரவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதிமுகவின் பல எம்.எல்.ஏ-க்கள், தவெக-விற்குத் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்துத் தங்களது ஆதரவாளர்களுடன் ரகசியமாக ஆலோசித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு, எம்.எல்.ஏ-க்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தயாராகி வருகிறார்களா என்ற கேள்வியும், இன்றைய சூழலில் இபிஎஸ்-ஐ சந்திக்க யாராவது வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version