சென்னையின் பெரம்பூர் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ-வான ஆர்.டி.சேகர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். 9 முறை திமுக வெற்றி பெற்ற இத்தொகுதியில் அவருக்குப் பலமான வாக்கு வங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித்தமிழன் களம் இறங்குகிறார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜசேகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய முகங்களை விஜய் எதிர்கொள்வதால், அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

விஜய்யின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தவரை, இளைய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெரம்பூர் போன்ற நகர்ப்புறத் தொகுதிகளில் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் வாக்குகள் தவெக-வுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இருப்பினும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பாரம்பரியமாக இருக்கும் வாக்கு வங்கியைத் தாண்டி, ஒரு புதுக்கட்சியாக விஜய் எவ்வளவு வாக்குகளைப் பிரிக்கப்போகிறார் என்பதே அவரது வெற்றியைத் தீர்மானிக்கும். இரண்டு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுவதால், வாக்குகள் சிதறினால் அது விஜய்க்குச் சாதகமாகவோ அல்லது ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவோ அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version