தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ராயபுரம், திரு.வி.கநகர் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 1-ம் தேதி முதல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே நடைபெற்ர 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடர்ந்தது.
இதற்கிடையே அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த செயலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூய்மை பணியாளர்கள் கைதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தனர். அதில், ”சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் எனவும், களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டதாகவும்” குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்தத் தடையுமில்லை என்றும் அனுமதியோடு போராட்டம் நடந்து, போலீசார் தடுத்தால் தலையிடலாம் எனவும் அனுமதி பெறவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் முறையீடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.