ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாமக நிர்வாகியும், வழக்கறிஞராக பணியாற்றிய சக்ரவர்த்தி, மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்ரவர்த்தி. இவர் வேலூர் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் சக்ரவர்த்தி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார். அத்தோடு சக்ரவர்த்தி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினார். சக்ரவர்த்தியின் உடற்கூறு ஆய்வில் அவரது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வழக்கை மரண வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி ரெண்டட்டி பகுதியை சேர்ந்த பிரபல குற்றவாளியான சீனிவாசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு அனைவரும் ஜாமினில் வெளிவந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் தான் இந்த சக்ரவர்த்தி. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசனின் கூட்டாளிகளான பிரபுவும், மாதவனும் சேர்ந்து சக்ரவர்த்தியை துப்பாக்கியால் சுட்டது போலீசார் விசாரணையில் அம்பலமானது.
அத்தோடு அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவிலும் சக்ரவர்த்தி சுடப்பட்ட காட்சிகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், சிப்காட் பகுதியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், மாதவனை கைது செய்தனர். தப்பியோடிய பிரபுவை பிடிக்க முயன்ற போது அவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். பாதுகாப்பிற்காக போலீசார் பிரபுவை காலில் சுட்டு பிடித்தனர்.