ஆலங்குடி அருகே காதலித்த பெண்ணிற்கு நிச்சயம் ஆனதால், காதலனே காதலியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேலகளக்குடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது திருமணத்திற்கு காவியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, காவியாவை வற்புறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய உறவினர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் காவியா அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில்,  இரவு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலை அஜித்குமாரிடம் தெரிவித்த காவியா, அந்த புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், நேற்று (நவ.27) காலை வழக்கம்போல் காவியா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது, மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே அவரை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் காவியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து அந்த இடத்திற்குச் சென்ற அம்மாபேட்டை போலீசார், காவியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்குச் சென்ற ஆசிரியையை காதலன் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version