தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஓட்டபிடாரம் தொகுதியில் தொழுநோய் மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்து அமைந்திருக்கிறது சோட்டையன்தோப்பு பகுதி. இந்த ஊர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு கீழ் வருகிறது. சமீபத்தில் இந்த பஞ்சாயத்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் இங்கு பஞ்சாயத்து தலைவர் கிடையாது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
அதிலும், ஆரோக்கியபுரம், சோட்டையன்தோப்பு மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடை வழியாக வெள்ளம் முறையாக செல்லாததால் அந்த பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர் ஆரோக்கியபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜோசப் தொழுநோய் மருத்துவமனைக்குள் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அங்குள்ள தொழுநோயாளிகளும் அருட்சகோதரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த பகுதியிலுள்ள சாலை மேடு பள்ளமாக இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகளும், வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் காணப்படுகிறது.
மழைநீரை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சியிடம் முறையிட்டால், இது தங்களுடைய பகுதி அல்ல என கூறுவதாகவும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டால் தான் இப்போது தலைவராக இல்லை எனவும் கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடிக்கு மிக அருகாமையில் உள்ள இந்த தொகுதி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியோடு உள்ளதால், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல், மாதா நகர் 6-வது தெரு பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கி காணப்படுவதுடன் பல்வேறு வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மழை நீர் அசுத்த நீராக மாறி அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல், டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருவதுடன் காலில் புண்கள் வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சுகாதாரத் துறை சார்பிலும் தங்கள் பகுதியில் சுகாதார நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் முறையாக வடிகால் வசதி மற்றும் சாலையை உயர்த்தி தரக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிறிது மழை பெய்தால் கூட தங்கள் பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
