நிதி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த நிலையில், மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும், தேவநாதன் யாதவ் ஜாமீனில் வெளியில் வந்தால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும் எனவும் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். கடுமையான நிபந்தனைகளை விதித்தாலும் ஏற்றுக்கொள்ளகவதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேவநாதன் யாதவ் தாக்கல் சொத்துக்களில் பெரும்பாலானவை மூன்றாம் நபரின் பெயரிலும், நிறுவனங்களின் பெயரிலும் இருப்பதால் அதனை முடக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், தேவநாதன் யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு காகிதத்தில் மட்டுமே அதிகமாக இருப்பதாகவும், நிஜத்தில் அதன் மதிப்பு வெறும் 48 கோடி ரூபாய் என்று மட்டுமே கூறினார்.

மேலும், தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உரிமையாளர்களிடமும், நிறுவனங்களிடமும் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version