பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன? என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு..
A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை – ரூ.40,000 அபராதம்
A2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.35,000 அபராதம்
A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை – ரூ.18,500 அபராதம்
A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை – ரூ.13,500 அபராதம்
A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.18,000 அபராதம்
A6 குற்றவாளி பாபு-க்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.10,500 அபராதம்
A7 குற்றவாளி ஹெரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனை -ரூ.14,000 அபராதம்
A8 குற்றவாளி அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,500 அபராதம்
A9 குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,000 அபராதம்
மேலும் பேசிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன்,”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வலுவான சாட்சியங்கள் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் இந்த பொள்ளாச்சி வழக்கு முன்னுதாரணமாக உள்ளது. வலுவான சாட்சியம் இருப்பதால் மேல்முறையீடு சென்றாலும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ நல்ல முறையில் விசாரணை நடத்தியுள்ளது. ரகசிய குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் கூட வெளியில் வராத வகையில் விசாரணை நடத்தப்பட்டது.”என்றார்.
8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சிறப்பு உதவி தொகை மூலம் பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கும், நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும். 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏ என்று குறிப்பிட்டு உள்ள பெண்ணிற்கு 2 லட்ச ரூபாயும், பி என்ற பெண்ணிற்கு 15 லட்ச ரூபாயும், சி என்ற பெண்ணிற்கு 10 லட்சம் , டி என்ற பெண்ணுக்கு 10 லட்ச ரூபாயும், இ என்ற பெண்ணிற்கு 8 லட்சம் ரூபாயும், எப் என்ற பெண்ணிற்கு 15 லட்ச ரூபாயும், ஜி என்ற பெண்ணிற்கு 15 லட்சம் ரூபாயும், ஹெச் என்ற பெண்ணிற்கு 25 லட்ச ரூபாயும் இழப்பீடு தொகையை பிரித்து வழங்க நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
அதேசமயம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேரும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.